கன்னியாகுமரி டிச 30
அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா இயக்குநர் ஷில்பா, பிரபாகர் சதீஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு. செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
தென்குமரி கடல் முனையில் வான்புகழ் வள்ளுவருக்கு 133 அடி உயர சிலையினை முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அமைத்தார். அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்தள்ளது. எனவே திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு நிகழ்ச்சியினை நம்முடைய முதலமைச்சர் மிகச்சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு ஆணையிட்டு, அப்பணிகளை எல்லாம் மிக வேகமாகவும் சிறப்பாகவும் நடந்து வந்ததை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மேற்பார்வையில் பணிகள் மிகச்சிறப்பாக நடந்து கொண்டு வந்தது. மேலும் நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொண்டு இவ்வெள்ளிவிழா பணிகளை அவர்கள் தினமும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தார்கள். இன்று நம்முடைய முதலமைச்சர் குமரிமுனைக்கு வருகை தர உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தந்த பிறகு 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்தினை பார்வையிட்டு, அதன் பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையினை பார்வையிடுகிறார். மேலும் அய்யன் திருவள்ளுவர் சிலையினையும் விவேகானந்தர் பாறை இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதன் பிறகு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து, பிறகு அய்யன் திருவள்ளுர் பாதமலருக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார். அதனைத்தொடர்ந்து அய்யன் திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி விளக்கு மற்றும் வீடியோ படக்காட்சியினை பார்வையிடுகிறார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் அக்காட்சி நடைபெற இருக்கிறது. அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் மிகச்சிறப்பாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழா மேடைக்கு வந்து கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில் கலந்துகொள்வார்.
தொடர்ந்து நாளை (31.12.2024) முதலமைச்சர் விழா பந்தலுக்கு வருகை தந்து உரை நிகழ்த்துவார். அதன் பின்னர் தவத்திரு.குன்றங்குடி பொன்னம்பல அடிகளார். கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் முன்னிலையுரை ஆற்றுவார்கள். அதன்பின்னர் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை வெளியீட்டு அதன் பின்னர் சென்னைக்கு திரும்புவார். அதனைத்தொடர்ந்து கருத்தரங்கம் என்னுடைய தலைமையில் நடைபெறும். மன்மோகன் சிங் மறைந்ததையொட்டி 31.12.2024 அன்று மாலையில் நடைபெற இருந்த அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, 01.01.2025 ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 31.12.2024 அன்று மாலையில் நடைபெறும். மூன்று நாள் நிகழ்ச்சி இரண்டு நாள் நிகழ்ச்சி ஆக நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.