தேனி, டிசம்பர் 12 –
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரதீப்பிற்கும் சின்னமனூரை சேர்ந்த நிகிலாவிற்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரதீப்பிற்கும் நிகிலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிகிலா பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நிகிலாவும் இவரது சகோதரர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனரான விவேக் மற்றும் உறவினர்கள் முத்தையன் செட்டிபட்டிக்கு சென்று திருமண சீர் பொருட்களை எடுக்க வந்துள்ளதாக பிரதீப்பிடம் கூறியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் தரப்பிற்கும், நிகிலா மற்றும் விவேக் தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி நிகிலாவை வெட்டி உள்ளார். சம்பவ இடத்திலேயே நிகிலா இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். தன் கண் முன்னே சகோதரி உயிரிழந்ததை கண்ட விவேக் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது பிரதீப்பின் தந்தை சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விவேக்கின் தலையில் சரமாரி குத்தி உள்ளார். விவேக்கும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த இரட்டைக் கொலை வழக்கு சம்பந்தமாக போடி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று கொலை வழக்கில் தொடர்புள்ள பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகிய இருவரும் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கொலை வழக்கில் சரண் அடைந்த மகன் மற்றும் தந்தை இருவருக்கும் நீதித்துறை நடுவர் நீதிபதி கமலநாதன் 24 மணி நேர காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மகன் மற்றும் தந்தை இருவரையும் போடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் 24 மணி நேரம் கழித்து போடி நீதிமன்றத்தில் கொலை வழக்கில் சம்பந்தமுள்ள இரண்டு குற்றவாளிகளையும் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.



