நாகர்கோவில் ஜன 23
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த காவலர் சைலஸ் , அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் மாதம் 20 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக ஆதாரத்துடன் அரசாங்கத்திற்கு கொடுத்ததால் உயர் அதிகாரிகள் பின்னிய பாலியல் எனும் சதி வலையில் சிக்கியிருப்பதாகவும், அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி போஸ்கோ பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர் எனவும், போலீஸாரால் தங்களது குடும்பத்திற்கு ஆபத்து உள்ளது எனவும் அவரது குடும்பத்தார் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர் .
அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த சைலஸ் இவர் 2003 ஆம் ஆண்டில் காவல் துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார் . காவல் துறையில் நேர்மையாக இருந்து மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என மிகுந்த ஆர்வம் அவரிடம் இருந்து உள்ளது .. கடந்த 2021 ஆம் ஆண்டு நாகர்கோவில் குற்றப்பிரிவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் அங்கு சங்கரன்கோவில், சிவகிரி காவல் நிலையங்கள் என பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த அவர் சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போது லஞ்சம் பெற்று தரும்படி எனது கணவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் நீதியோடு நேர்மையோடும் பணி செய்ததால்
அங்குள்ள இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் லாட்டறி சீட்டு விற்பனை, கஞ்சா விற்பனை, கனிம வளங்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் மாதம் 20 லட்சத்திற்கு அதிகமாக லஞ்சம் பெற்று வருவதை பல்வேறு ஆதாரங்களுடன் அரசுக்கு அனுப்பி உள்ளார். இதில் உயர் அதிகாரிகள் விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யபட்டதோடு, புகாரில் இடம் பெற்ற உயர் அதிகாரிகளும் தண்டனைக்கு உள்ளாக்க பட்டார்கள்.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனது கணவர் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். மேலும் எனது கணவர் கடந்த ஒரு மாத காலமாக விடுமுறையில் இருந்து வருகிறார். எனது கணவர் நேர்மையுடன் செயல்பட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததால்
ஆத்திரமடைந்த உயர் போலீஸ் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து முதல் நிலை காவலர் சைலஸ்சை பழிவாங்க திட்டமிட்டு அவர் மீது பொய்யான பாலியல் வழக்கு பதிவு செய்து நேற்று முன் தினம் பணகுடி பகுதியில் வைத்து துப்பாக்கி முனையில் அவரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யும் போது துப்பாக்கியை காட்டி மிரட்டியும் அவர் மீது தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர். காவல்துறையில் நேர்மையாக பணியாற்றி காவல்துறை உயர் அதிகாரிகள் பெரும் கையூட்டுகளை குறித்து ஆதாரத்துடன் வெளியிட்டு அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளால் பழிவாங்க பட்டுள்ளதாகவும், போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று பாளையங்கோட்டை சிறையில் சைலஸ் அடைக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை தமிழக முதல்வர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் முதல் நிலை காவலர் சைலஸ் க்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது எனவே எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .