ஆரல்வாய்மொழி. டிச, 07:வெள்ளமடம் நான்கு வழிச்சாலையில் அனுமதி இன்றி எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி சென்ற டெம்போ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கனிம வளங்களை கடத்தி கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு சில சமூக விரோதிகள் எந்தவித அரசு அனுமதியும் இன்றி சட்டத்துக்கு புறம்பாக கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல்கள் வந்ததன் அடிப்படையில் குமரி மாவட்டத்தின் எல்கை பகுதியான காவல்கிணறு -நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் ஆரல்வாய்மொழி பகுதியிலும் மற்றும் ஆரல்வாய்மொழி காவல் நிலையம் அருகேயும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் போலீசார் கனிம வளங்களை ஏற்றி வருகின்ற அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அரசு அனுமதி இன்றி கனிம வளங்களை ஏற்றி வருகின்ற டாரஸ்லாரிகளையும்,டெம்போக்களையும் பறிமுதல் செய்வதுடன் மற்றும் அதன் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே அடிக்கடி போலீசார் பல பகுதிகளில் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் காவல்கிணறு – நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் வெள்ளமடம் அருகே ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மகேந்திரா நிசான் டெம்போ வந்து கொண்டிருந்தது. அதனை உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தடுத்து சோதனையிட முயன்ற போது அந்த டெம்போவை ஓட்டி வந்த ஓட்டுநர் போலீசார் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் டெம்போவில் இருந்து இறங்கி தப்பி ஓடினார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் டெம்போவை சோதனையிட்டபோது அதில் எந்தவித அரசு அனுமதியும் இன்றி சுமார் ஒரு யூனிட் எம் சாண்ட் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த டிம்பாவை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் மேலும் அந்த டெம்போவை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் டெம்போவின் உரிமையாளர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்



