ராமநாதபுரம், நவ. 21 –
ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நிதி மற்றும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. சார்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண நிதி மற்றும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
இதன்பின்னர் ஹக்கீம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கிய அரசு ராமேசுவரத்தில் பள்ளி மாணவியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கவில்லை. உடனடியாக தேவையான நிவாரண நிதி அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் பாமக தலைவர் அன்புமணி ஆணைக்கிணங்க ராமநாதபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.
அப்போது, மாவட்ட தலைவர் திருப்பாலை முனியசாமி, மாவட்ட பொருளாளர் ராஜாமணி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் கார்த்திக், மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தும் கான், கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பிரவீன் குமார், பசுமைத்தாயகம் மாநில துணைச்செயலாளர் கர்ணமஹாராஜன், திருவாடானை தொகுதி செயலாளர் காதர்ஷா, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் பஷீர், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், மாவட்ட மாணவர் சங்க தலைவர் கபிஸ் ராஜ், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சார்லஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.



