கிருஷ்ணகிரி, ஏப். 17- ஆதிதிராவிடர் மக்களுக்கு என எடுக்கப்பட்ட நிலத்தை பல ஆண்டுகளாக ஒப்படைக்காத் தமிழக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நில மீட்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டஹள்ளி கிராமத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 53 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர் துறையின் கீழ் இடம் எடுக்கப்பட்டு 25 குடும்பத்தினருக்கு மட்டும் இலவச பட்டா வழங்கபட்டது. மீதமுள்ள இடத்தை 1996 ல் கிருஷ்ணகிரி வட்டாச்சியரால் நத்தமாக மாற்றி மாற்று சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்டு ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் வீடின்றி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிலமீட்பு போராட்டம் அறிவிக்கபட்டது. இதன்படி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நில மீட்பு போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையிலும், தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் முன்னிலையிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மைய மாவட்ட செயலாளர் மாதேஷ்., ஆதிதிராவிடர் மக்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வீடில்லாத 53 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கபடும் என்று அறிவித்து கடந்த 1992 ஆம் ஆண்டில் 25 நபர்களுக்கு மட்டும் வழங்கபட்டுள்ளது. மீதமுள்ள 28 நபர்களுக்கான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அவற்றை அகற்றி பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மெத்தன போக்கை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என கூறினார். இந்த ஆர்பாட்டத்தில் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த 250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்துக் கொண்டனர்.



