கிருஷ்ணகிரி பிப்.02. பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவது வழக்கம். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்கும். அந்த வகையில், தமிழக பாஜகவில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கின. இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் மூலமாக, கிளை தலைவர், மண்டல தலைவர், மாவட்டத் தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி பாஜக அலுவலகத்தில் நேற்று மாலை மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக பொருளாளராக இருந்த கவியரசு மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து மாவட்ட பாஜக அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் K.P.இராமலிங்கம் கலந்துக் கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்., தமிழகத்தில் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாதி பாகுபாடு, சமத்துவமின்மை, மத மோதல்கள், தலித்துகளுக்கு எதிரான தாக்குதல், போன்றவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் , திமுக கொடி அணிந்த காரில் பெண்களை விரட்டுவது, என பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தொடர்ந்து மக்களுக்கு பயனற்ற அரசாக திமுக அரசு உள்ளது. இதனை அகற்ற வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்றும், உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. தொடந்து முன்னேற்றம் அடையும் வகையில் நாளுக்கு நாள் சிறப்பான பொருளாதார நாடாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா திகழ்கிறது என கூறினார். உடன் தேசிய பொதுக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.



