நாகர்கோவில், ஜூன் 12 –
குமரியில் போதைப் பொருள் ஒழிப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவுப்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மெத்தா பெட்டமைன் பயன்படுத்திய வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் வடசேரி கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் மீது ஏராளமான கஞ்சா வழக்குகள் உள்ளன. இதனை அடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அழகுமீனாவிற்கு எஸ்.பி.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். இதனையடுத்து வடசேரி போலீசார் நேற்று நாகர்கோவில் கிளைச் சிறையில் இருந்து மணிகண்டனை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.



