கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் உள்ள பாரூர் பெரிய ஏரி, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ஏரியாகக் கருதப்படுகிறது. இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1887 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாரூர் பெரிய ஏரி, சுமார் 70 கிராமங்களுக்கு தண்ணீர் பாசனம் வழங்குகிறது. 1583 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி, மீன் பிடிப்பதற்கும் மிக முக்கிய இடமாக திகழ்கிறது.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பாரூர் பெரிய ஏரிக்கு வருகை தருகின்றனர். ஏரியின் அழகும், பசுமையும் இங்கு வரும் அனைவரையும் கவர்ந்து செல்கின்றன. சுற்றுலா தளமாக மாற்றப்பட்டால், மாவட்டத்திற்கு பெரும் வருவாய் கிடைக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாக கிராம மக்களும், வணிகர்களும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். ஏரியின் சுற்றுப்புறத்தை மேம்படுத்தி, சுற்றுலா வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கையிட்டுள்ளனர்.
மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம், இந்த கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுத்து, பாரூர் பெரிய ஏரியை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாற்ற முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.