கன்னியாகுமரி ஜூன் 16
கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் கடலில் 25 நாட்டிக்கல் மைல் தொலைவை கண்காணிக்கும் வகையில் நவீன ரேடார் கருவி பொருத்தப்பட்டது.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை அருகே கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்த கலங்கரை விளக்கம் 1970ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இது தரைமட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 25 மீட்டர் தொலைவுக்கு நன்றாக வெளிச்சம் தெரியும் வகையில் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப் பட்டுள்ளது. கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு நேரில் சென்று பார்ப்பதற்கு வசதியாக 139 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன.பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் கடந்த 2008ம் ஆண்டு வரை சுற்றுலா பயணிகள் இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. 2008ம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் 2012ம் ஆண்டு இந்த கலங்கரை விளக்கத்தில் பாதுகாப்பு கருதி ரேடார் கருவி பொருத்தப்பட்டது.
மேலும், கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சென்று கன்னியாகுமரி கடற்கரையைப் பார்ப்பதற்கு வசதியாக நவீன லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
தற்போது பழைய ரேடார் கருவியை மாற்றி நவீன கடலோர கண்காணிப்பு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரேடார் மூலம் 25 நாட்டிங்கல் கடல் தொலைவில் வரும் கப்பல்களை கண்காணித்து ஸ்கேன் செய்ய முடியும். இதனால் கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப் படுவதுடன், கடல் மார்க்கமாக ஊடுருவல் மற்றும் கடத்தல் பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க முடியும் என கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த அதி நவீன கடலோர கண்காணிப்பு ரேடார் நேற்று முதல் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.