நாகர்கோவில், டிச. 15 –
திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் இறங்கியதை தொடர்ந்து ரயில் மீண்டும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ஜெயசேகர் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் உள்ள கழிவறையில் சோதனையை மேற்கொண்ட போது கூரையில் உள்ள ஸ்குரு கழற்றப்பட்ட நிலையில் இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் அதை முழுவதும் கழட்டி பார்த்தபோது, அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 3 பார்சல்களில் 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கஞ்சாவை போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும் வடமாதத்திலிருந்து வந்த வைஷ்ணவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சாவும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.



