நாகர்கோவில், டிசம்பர் 31 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு அரசின் திட்டங்களை மாவட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மட்டுமல்ல, மக்களின் நிறை குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றித் தருவது, பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அந்தந்த துறை சார்ந்த அலுவலகத்தால் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கவனிப்பதிலும் மாவட்டத்தை தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியான மாவட்டமாக கொண்டு வருவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் மாவட்ட மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படாமல் பாதுகாக்கவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இவர் கன்னியாகுமரி கண்ணாடி பாலம் (Glass Bridge) கட்டுமான மேற்பார்வைக்காக தமிழக அரசிடம் இருந்து விருது பெற்ற மாவட்ட ஆட்சியர் என்பது தனி சிறப்பு.
இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தப் பணியைத் தொடங்கி தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் இந்தச் சிறப்பு திருத்தம் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான முக்கிய தேதிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆர்.அழகுமீனா வெளியிட்டு அதற்கான பணிகளை திறன் பட செய்து முடித்து வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி 100% நிறைவு செய்த முதல் மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமையை ஈட்டித் தந்தார்.
இவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு எடுத்துக் கொண்டது முதல் இன்று வரை தன்னுடைய பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருவதும் எந்த நேரத்திலும் மாவட்டத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று ஆய்வு நடத்தி அப்பகுதியினரின் தேவைகளை நேரடியாக கேட்டு அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிடுவது மட்டுமல்லாமல் மீண்டும் அதிகாரிகளிடம் கேட்டும், சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் கேட்டும் சிறந்த ஆட்சியராக செயல்பட்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மனுநீதி நாளில் மனு எழுதத் தெரியாதவர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையம் ஏற்படுத்தி ஆட்சியர் அலுவலக பணியாளர்களை பணியமரத்தி உதவி செய்வது மட்டுமல்லாமல், மனுநீதி நாளில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்பதில் தனி கவனம் செலுத்தியும் வருகிறார்.
மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை தனது பணியை திறம்பட செய்து வரும் மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் சேவையால் பயனடைந்து வரும் கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற மக்கள் வரை உள்ள பயனாளிகள் அவரை போற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலகெடுவுக்குள் எஸ் ஐ ஆர் பணிகளை விரைந்து முடித்து கடை கோடி மாவட்டதால் முடியும் என செய்து காட்டிய மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவின் பணி திறனை ஊக்குவித்து அவரை தேர்தல் ஆணையம் சிறந்த “மக்களின் ஆட்சியர்” என அறிவித்து விருது வழங்கி கௌரவ படுத்த வேண்டும் என்பதே குமரி மக்களின் கோரிக்கையாக உள்ளது.



