சுசீந்திரம், நவ. 11 –
நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரன்விளை அனந்தனார் கால்வாயில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கால்வாயில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்தவரின் பேண்ட் பாக்கெட்டில் செல்போன் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்கள். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது பிணமாக கிடந்தவர் வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்த வினோத்குமார் (31) என்பது தெரியவந்தது.
வினோத்குமார் பிணமாக கிடந்தது குறித்து தகவல் தெரிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வினோத்குமார் கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் கால்வாயில் பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது. வினோத் குமாரின் உடலில் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் யாரோ வினோத்குமாரை கொலை செய்து கால்வாயில் வீசி விட்டதாக கூறி உறவினர்கள் கதறி அழுதனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 8ம் தேதி மாலை என்.ஜி.ஓ.காலனி பகுதியில் உள்ள மதுபான கடையில் வினோத்குமாருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வினோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வினோத்குமாரின் அண்ணன் மணிகண்டன் (37) சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: இறந்து போன வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், வினோத்குமாரின் அப்பா, அம்மா இறந்து விட்டதாகவும் அதனால் வினோத்குமாரை மணிகண்டன் கவனித்து வந்ததாகவும், உறவினர்கள் காலை 6:30 மணிக்கு முன்பு ஏதோ சமயத்தில் வல்லன்குமாரன்விளையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வினோத்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தான் வினோத் குமார் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



