நாகர்கோவில், நவம்பர் 22 –
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ. திலீபன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது ஒழுகினசேரி சுடுகாடு பகுதியில் வாலிபர்கள் சிலர் கஞ்சாவுடன் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. இதை அடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேர் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையில் ஒருவர் தோவளை பண்டாரபுரத்தைச் சேர்ந்த ராகுல் (19). என்பதும், மற்றொருவர் மருங்கூர் தோப்பூர் குமாரபுரத்தைச் சேர்ந்த அஜிஸ் (24). என்பதும் இவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ராகுலிடம் இருந்து 50 கிராம், அஜிஸிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைதான ராகுல், அஜிஸ் இருவரும் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களது வங்கி கணக்கையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் செல்போனை பறிமுதல் செய்து யார் மூலம் கஞ்சா கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவருக்கும் தொடர்பு உண்டா, இவர்களின் கூட்டாளிகள் வேறு யாராவது கஞ்சாவுடன் தப்பியிருக்கிறார்களா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.


