மார்த்தாண்டம், டிச. 18 –
கடையால் பேரூராட்சிக்குட்பட்ட களியல் பகுதியை சுற்றி 3 கல்குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில் அதிக அளவில் பாறைகள் உடைக்கப்பட்டு கனிம வளங்கள் கடத்தியதால் அந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த காலங்களில் குவாரிகள் மூடப்பட்டன.
பல வருடங்கள் செயல்படாமல் இருந்த நிலையில் கட்டச்சல் என்ற பகுதியில் உள்ள குவாரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் மூலம் செயல்பட தொடங்கியது. எனினும் குவாரியில் பாறைகளை உடைக்க அனுமதி இல்லாததால் முதலில் வெளியிலிருந்து கற்கள் கொண்டு வந்து ஜல்லி மற்றும் பாறை பொடிகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதற்கு இடையே பக்கத்தில் உள்ள ஒரு குவாரியை வாங்கி அவ்வப்போது திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்படுவதாகவும் அவற்றை கேரளாவுக்கு கடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குவாரியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்ந்து குவாரியில் பணியில் இருந்த மேற்பையாளர் அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (41) என்பதை போலீசார் கைது செய்தனர். இவர் கடையாலுமூடு பேரூராட்சி 18 ஆம் வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே பகுதியை சேர்ந்த குமார், நிலத்தின் உரிமையாளர் மற்றும் வாகன உரிமையாளர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குவாரியில் முறைகேடு நடந்தது தொடர்பாக கண்டுகொள்ளாத கடையாலுமூடு காவல் நிலைய எழுத்தர் உட்பட இரண்டு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



