நாகர்கோவில், டிச. 16 –
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் சட்ட ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்து கூறியதாவது: மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பல்வேறு போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் உள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்படுவதோடு, போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களை கைது செய்து, அவர்களை சீர்திருத்த சிறைகளுக்கு அனுப்பி தக்க மனநல ஆலோசனை வழங்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது.
குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து, உண்மையான குற்றவாளிகளை கைது செய்து மேல்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல்நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் சாலை பாதுகாப்புப்பணியினை மேம்படுத்தும் வகையிலும், விபத்துக்களை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளில் தேவையான இடங்களில் மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத்தடைகள், பாதச்சாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவைகள் அமைக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியான சரிசெய்ய வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிவதையும், 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதையும் போக்குவரத்து காவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், துறை அலுவலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



