கருங்கல், டிச. 6 –
கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (52). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (47). இந்த தம்பதிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். தாயும் மகளும் வீட்டில் வசித்து வருகின்றனர். அனிதா அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் ரப்பர் பால் எடுத்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு ரப்பர் தோட்டத்திற்கு தாயும் மகளும் சென்று உள்ளனர். பின்னர் நண்பகல் 12 மணி அளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையின் கதவும் உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 22 கிராம் தங்க நகை மற்றும் ரூ. 4000 போன்றவை மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அனிதா கருங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் உள்ளூர் நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


