குளச்சல், ஜன. 12 –
மார்த்தாண்டம் அருகே விரிகோடு அடுத்த மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்பின் (22). பெயிண்டர். இவருக்கும் திக்குறிச்சி பகுதியை சேர்ந்த சந்தியா (19) என்பவரும் காதலித்து கடந்த 25.7.2025 அன்று திருமணம் செய்து கொண்டனர். சந்தியா தக்கலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக உள்ளார். சந்தியாவின் பெற்றோர் தற்போது திங்கள்நகர், செட்டியார் மடம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது கணவரை பிரிந்து பெற்றோருடன் இருக்கும் சந்தியா குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கணவர் கிறிஸ்பின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலர் தன்னிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு எனது கணவரும் என்னை அடித்து துன்புறுத்துகிறார்.
தனி குடித்தனம் சென்ற பிறகும் என்னை தாக்கி கொடுமைப்படுத்தி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த கொடுமை தாங்க முடியாமல் நான் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். எனது பெற்றோர் என்னை காப்பாற்றினார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது வரதட்சனை கேட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தன்னை கொடுமைப்படுத்தும் கணவர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் தற்போது கிறிஸ்பின் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


