நாகர்கோவில் செப் 26
குமரி மாவட்டத்தில் அணுக்கழிவு சுரங்கம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக தென்மாவட்டங்களில் உள்ள கடற்பரப்பு கனிம வளக்கொள்ளையால் மணற்குன்றுகள் அழிக்கப்பட்டு கடல் அரிப்பு அதிகரித்து கடலோர கிராமங்கள் தத்தளித்து வருகிறது. கடல்நீர் கிராமத்திற்குள் புகுவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் சுகாதார பாதிப்பிற்கும் உள்ளாகி வரும் நிலை நீடித்து வருகிறது.
குறிப்பாக குமரி மாவட்டத்தின் 69.06 கி.மீ நீளம் கொண்ட கடற்கரையில் 44.56 கி.மீ கடற்கரை பரப்பு இத்தகைய கடல் அரிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு கதிரியக்கம் கொண்ட தாது மணல் எடுக்கபட்ட பின்னர் கேன்சர், சிறுநீரக பாதிப்பு, தைராய்டு, தோல் நோய், ஆஸ்துமா, கருசிதைவு, மூளை வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்பிற்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணுசக்திதுறை குமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமவளம் மிகுந்த கிள்ளியூர் தாலுகா கீழ்மிடாலம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு பகுதிக்கு உட்பட்ட 1144.0618 ஹெக்டேர் பரப்பில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்து உள்ளது. இதற்கு தமிழக அரசும் இசைவு தெரிவித்து உள்ளதோடு, ஒன்றிய சுரங்க அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையொட்டி வருகின்ற 1ம் தேதி தக்கலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் அமைய இருக்கும் மொத்த பரப்பில் 353.4876 ஹெக்டேர் பாதுகாக்கபட்ட கடலோர மண்டலத்தின் கீழ் வருகிறது. மேலும் இத்திட்டத்தின் படி 59.88 மில்லியன் டன் அளவிலான அணுக்கனிமங்கள் வெட்டி எடுக்கப்படலாம். ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் என்ற அளவில் 40 ஆண்டுகளுக்கு மணவாளகுறிச்சி ஐஆர்இஎல் ஆலைக்கு தேவையான மூலப்பொருட்கள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கூடன்குளம் அணுமின் உலை உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வரும் ஒன்றிய அரசு இத்திட்டத்தின் மூலம் குமரி மாவட்ட மக்களுக்கு பேராபத்தை உருவாக்கிட முயல்கிறது. இதனால் ஏற்படும் கதிரியக்கத்தால் இப்பகுதி மக்கள் மேலும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க இயலாது. கடலோர கிராமங்கள் அழிவதோடு மீனவர்களின் வாழிடம் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலுமாய் சீர்குலைவதோடு இயற்கை வளமும், சுற்றுச்சூழலும். காலநிலை மற்றும் உயிரியல் பன்மயத்தன்மை அடியோடு பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தினை கைவிட வேண்டும் என கடலோர பகுதி மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே இப்பகுதியில் ஏற்பட்டு உள்ள கதிரியக்கம் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது
ஒன்றிய அரசின் இச்செயல் இனயம் சரக்குபெட்டக மாற்று முனையம் திட்ட தோல்வி மற்றும் தேர்தல் தோல்வி காரணமாக குமரி மீனவர்கள் மீது ஒன்றிய அரசு கொண்டுள்ள வெறுப்பின் உச்சக்கட்டம் போல் எண்ண தோன்றுகிறது.
தமிழக அரசு உடனடியாக
ஒன்றிய அரசின் கடலோரத்தை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து மக்களை காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.