தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அண்ணா நகர், இருளர் குடியிருப்பு பகுதிகளில் இருளர் இன மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள 13 வீடுகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து இருளர் இன மக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கும், பள்ளிகளுக்கும் தவறாமல் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் மேற்கு ஏமனூர் காலனி, ஆத்து மேட்டூர் பகுதிகளில் பொதுமக்கள் நேரில் சந்தித்து அடிப்படை தேவை குறித்து கேட்டு அறிந்தார். அப்போது சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஏமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தலையும் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் அடிப்படை கணித அறிவு, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஏமனூரில் இருந்து சிங்காபுரம் காவிரி கரையோர பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை குறித்து கேட்டறிந்தார். ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்நாடகா எல்லையில் உள்ள கொங்காரப்பட்டி கிராம மக்களிடம் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார். இப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்தவும் ஜாதி சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மலை கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆவியின் போது பெண்ணாகரம் தாசில்தார் லட்சுமி, ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, அபுல் கலாம், ஆசாத் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



