கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற இக்கிராம சபா கூட்டத்திற்கு புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரங்கநாதன் தலைமை வகித்தார். முன்னதாக கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை வாசித்து காண்பிக்கப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டில் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் சால்வை அணிவித்து கௌரவப்படு்த்தினர். அதேபோல் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பின்னர் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஊராட்சி தலைவரின் கடைசி கிராம சபா கூட்டம் என்பதால் ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் பொது மக்களிடையே உருக்கமாக பேசினார். பின்னர் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் தேவைகள் குறித்து மனுக்களை அளித்தனர். ஊராட்சி செயலாளர் சிவசங்கர் நன்றியுரையாற்றினார். இக்கிராம சபா கூட்டத்திற்கு கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதேபோல் பாளேதோட்டம் ஊராட்சிக்குட்பட்ட திப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் விமலா வேலாயுதம் தலைமையிலும், களர்பதி ஊராட்சிக்குட்பட்ட களர்பதி செல்லியம்மன் கோவில் வளாகத்தில் ஊராட்சி தலைவர் புகழேந்தி தலைமையிலும், வீரமலை ஊராட்சிக்குட்பட்ட பெரியகரடியூர் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர் முனிரத்தினம் குணசேகரன் தலைமையிலும், மேலும் போச்சம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.