ஈரோடு மே 28
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
ஆதார் முகவரி மாற்றம், மாதிரிப்பள்ளியில் சேர்க்கை, மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, கலைஞரின் கனவு இல்லம், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் மொத்தம் 203 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,600 வீதம் ரூ.28,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்க ரூ.6,700 வீதம் ரூ.33,500 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள், 10 பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.61,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படும் விடுதிகளை நன்முறையில் நிர்வகிக்கும் பொருட்டு முதல் மூன்று இடங்களை பெற்ற காப்பாளர்களுக்கு காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



