நாகர்கோவில், மே 27:
குழித்துறை அருகே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் இறந்து கிடந்ததால் மதுரை – புனலூர் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. போலீசார் உடலை மீட்டு சென்ற பின் ரயில் புறப்பட்டு சென்றது.
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான ரயில் பாதையில் குழித்துறை மேற்கு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை ஆண் ஒருவரின் உடல் துண்டாகி இறந்த நிலையில் கிடந்தது. நாகர்கோவில் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ. குருநாதன் தலைமையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்தவர் சுமார் 60ல் இருந்து 70 வயது மதிக்கத்தக்க தொழிலாளியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உடல் இரு துண்டுகளாக கிடந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் மதுரையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் வழியாக புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் குழித்துறை ரயில் நிலையத்தில் சுமார் 35 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் இருந்து உடல் எடுக்கப்பட்ட பிறகுதான் ரயில் புறப்பட்டு சென்றது. இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.