ஈரோடு மே 2
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பவானி ஊராட்சி ஒன்றியம் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், அதேபகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.33.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மயிலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மயிலம்பாடி, கல்வநாயக்கனூர், சக்திநகர் மற்றும் கண்ணடிப்பாளையம் ஆகிய குக்கிராமங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் வீதம் ரூ.12.40 இலட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ராம்நகர், கல்வநாயக்கனூர் மற்றும் கண்ணடிபாளையம் குக்கிராமங்களில் ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தலா தலா ரூ.1.50 இலட்சம் வீதம் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் 5 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்டம் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, கல்வநாயக்கனூர் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, கண்ணடிபாளையம் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விபரத்தினை கேட்டறிந்து, துணை சுகாதார நிலையத்தின் சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மயிலம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மற்றும் பல்வேறு இடங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ண மூர்த்தி வரதராஜன் வட்டாட்சியர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



