கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வரும் 12ஆம் தேதி சித்ரா பௌா்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவை நடைபெறும். தொடா்ந்து காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை நடைபெறும். காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், தயிா், நெய், பன்னீா், இளநீா், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிா்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இதையடுத்து அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள், தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடா்ந்து பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, தொடா்ந்து
அம்மனுக்கு பலவகையான மலா்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதையடுத்து அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் அமரச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், தொடா்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெறும்.
ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் பழனிகுமாா், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.



