நாகர்கோவில் ஏப். 23:
முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள “முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்” செய லாக்கம் தொடர்பான ஆய்வின் போது கலெக்டர் அழகுமீனா கூறியதாவது:
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் நோக்கத்துடன் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ரூபாய் ஒரு கோடி வரை வங்கி கடன் பெற்று தொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள், மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் உச்ச வயது, வரம்பு நீக்கம் உட்பட பல்வேறு விதி தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. சொகுசுபஸ், சரக்கு வாகனங்கள், பல்பொருள் அங்காடி, எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங், ஒருங்கிணைந்த பண்ணை ஆடு, மாடு, கோழி பண்ணைகள், தேனி வளர்ப்பு, ஆட்டோ மொபைல் சர்வீஸ் ஸ்டேஷன், துணிக்கடை , மீன் வளர்ப்பு, ஹார்டுவேர் கடை, பேப்பர் பிளேட் மற்றும் பேப்பர் கப் செய்தல், மாவு அரவை மில் உட்பட பல்வேறு தொழில்கள் தொடங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சுமார் 6,200 முன்னாள் படை வீரர்களும் 1,800 கைம்பெண்களும் உள்ளனர். இருப்பினும் 124 முன்னாள் படை வீரர்கள் மட்டுமே இத்திட்டத்தில் ஆர்வம் தெரிவித்து பதிவு மேற்கொண்டுள்ளனர்.
எனவே இத்திட்டத்தில் மேலும் அதிக எண்ணிக்கையில் தொழில் முனைவோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். வரும் 30ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.