மார்த்தாண்டம் ஜன 21
கடையாலுமூடு அருகே உள்ள பத்துகாணிப்பகுதியை சேர்ந்தவர் ரசல் (67). பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மெஜோ (34) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் மெஜோ பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று மாலையில் ரசல் மெஜோ வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் மது வாங்க வீட்டிலிருந்து வெளியே சென்ற மெஜோ மேலும் மது குடித்துவிட்டு வந்துள்ளார். ஆனால் றசல் கேட்டை பூட்டி விட்டு வீட்டுக்குள் சென்று படுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மேஜோ காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று தந்தையிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அவர் நாற்காலியால் சரமாரியாக ரசலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரசல் அலறி கீழே விழுந்தார். பின்னர் மெஜோ போதையில் அங்கே சோபாவில் படுத்து தூங்கிவிட்டார்.
இதற்கிடையில் ரசலின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கடையாலு மூடு போலீசருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று ரசலை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கிருந்து குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலே ரசல் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் வீட்டில் போதையில் படுத்து இருந்த மெஜோவை கைது செய்தனர்.