தூத்துக்குடி, ஆகஸ்டு 12 –
தூத்துக்குடியில் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்களை இல்லத்திற்கு சென்றும் வழங்கும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் சிறப்புக் கவனம் தேவைப்படும் 20,42,657 முதியவர்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. இதன்படி வட சென்னை பகுதியான தண்டையார்பேட்டை கோபால் நகரில் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்களை வழங்கி இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இதன் தொடா்ச்சியாக தூத்துக்குடியில் டூவிபுரம் ஜெயராஜ் ரோடு நியாய விலைக்கடை அருகே மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரரின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை அமைச்சர் கீதா ஜீவன் விநியோகம் செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேஷ், துணை பதிவாளர் கலையரசி, துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) சுப்புராஜ், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், வட்டார வழங்கல் தாசில்தார் ஞான ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளா்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறப்பட்டு கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு தராசு, விற்பனை முனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருள்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்துக்கே சென்று விநியோகிக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.



