சென்னை, ஆகஸ்ட் 11 –
தன்னார்வ தொண்டு நிறுவனமான பஞ்சாப் மகளிர் சங்கம் ஏற்பாட்டில் காது கேளாத மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. பஞ்சாப் பெண்கள் சங்கம், மெட்ராஸ் ஈ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து செவித்திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 2 முதல் 12 வயதுக்குட்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய 36 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கியது. இந்த நிகழ்வில் டாக்டர் மோகன் காமேஸ்வரன், இந்திரா காமேஸ்வரன் மற்றும் முன்னணி ஆடியோலஜிஸ்ட் ரஞ்சித் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மோகன் பரமேஸ்வரன் தெரிவித்ததாவது: பஞ்சாப் மகளிர் சங்கம் 36 காது கேட்காத குழந்தைகளுக்கு நிரந்தமாக காது கேட்கும் கருவியை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் செவித்திறன், மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மீட்சி பெறும். இதனால் குழந்தைகளின் வாழ்க்கையே மாற்றம் காணப்போகிறது. குழந்தைகள் சாதாரணப் பள்ளியில் பயின்று மற்றவர்கள் போல் கல்வி, வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கையை பெறுவார்கள். இந்த காது கேட்கும் கருவியை பாதுகாத்து பயன்படுத்தி குழந்தைகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் செயல்பட வேண்டியது பெற்றோரின் பொறுப்பு என்றார்.



