மார்த்தாண்டம், ஆக. 6 –
தமிழ்நாடு அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை கடந்த 15.07.2025 அன்று துவக்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று விளவங்கோடு வட்டத்தில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காஞ்சியோடு ஆர்.சி சர்ச் வளாகத்தில் நடைபெற்ற முகாமினை நேரில் பார்வையிட்டு முகாம் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டு தகுதியானவர்களுக்கு உடனடியாக ஆணை வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.
மேலும் தொடர்ந்து சமூக முதலீட்டு நிதியின் கீழ் 2 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து தோவாளை வட்டம் பூதப்பாண்டி ராஜலெட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திரு. முகமது அலி என்பவருக்கு மின்சார துறை சார்பில் உடனடியாக மின் இணைப்பில் பெயர் மாற்றத்திற்கான ஆணை வழங்கப்பட்டதோடு தொழிலாளர் நலத்துறை சார்பில் வள்ளியம்மாள் என்பவருக்கு உடனடியாக தொழிலாளர் நல வாரிய அட்டை வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முகமது அசன் என்பவருக்கு தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் திருவட்டார் வட்டம் குமரன்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஆனையடி CSI சமுக நலக்கூடத்தில் நடைபெற்ற முகாமில் 3 பயனாளிகளுக்கு வருமான சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. எனவே பொதுமக்கள் அனைவரும் உங்கள் பகுதிக்கு அருகாமையில் நடைபெறவுள்ள முகாம்களில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
நடைபெற்ற முகாமில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் இராமலிங்கம், வட்டாட்சியர்கள் வயோலா பாய் (விளவங்கோடு), கோலப்பன் (தோவாளை), பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



