இராமேஸ்வரம், ஜூலை 19 –
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் உள்ள மத நல்லிணக்க புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 483-ம் ஆண்டு திருவிழா சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை அருள் ஜோசப், புனித தெரசா ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியராஜா, புனித சந்தியாகப்பர் ஆலய விழா குழுத் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி வைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள தூய சந்தியாகப்பர் ஆலயத்தில் மும்மதத்தினர்கள் அனைவரும் ஒன்றினைந்து நடத்தப்படும் மத நல்லிணக்க திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சந்தியாகப்பரின் 483 ஆம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆலயத்தில் இருந்து சந்தியாகப்பர் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கிராமத் தலைவர்கள் எடுத்து வர புனித நீர் தெளித்து ஆசீர்வதித்து கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இந்த திருவிழாவானது பத்து நாள் நடைபெற உள்ளது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 24-ம் தேதி சந்தியாகப்பர் திருத் தேரோட்டம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மத வேறுபாடு இன்றி பக்தர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மும்மத சமுதாய பெரியோர்கள், தீவு அருட்தந்தையர், தீவு அருட்சகோதரிகள், இறை மக்கள், புனித தெரசாள் பங்கு தங்கச்சிமடம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



