தருமபுரி, ஜூலை 17 –
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசலில் சவாரி செய்து மகிழ்வார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது சுற்றுலாப் பணிகள் அருவிகளின் குளிப்பதற்கும், பரிசலில் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்படும். தண்ணீர் வரத்து குறையும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல்களில் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படும்.
இந்த நிலையில் காவிரி ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் கன மழை பெய்த காரணத்தால் அங்குள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாக சார்பில் தடை விதிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 25 நாட்களாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பெரும்பாலான வெளியூர் சுற்றுலா பயணிகள் பென்னாகரம் அருகே மடம் வனத்துறை சோதனை சாவடியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் 20 தேதி பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் விளக்கிக் கொள்ளப்பட்டு காவேரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 25 நாட்களுக்குப் பின் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மலர் தூவி தொடங்கி வைத்து பொதுமக்கள் மற்றும் பரிசல் ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, பொது தாசில்தார் பிரசன்ன மூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



