மயிலாடுதுறை மே. 13
ஆசியாவிலேயே உயரமான 54அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு, பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா , ரஷ்யா ஜெர்மனி கஜகஸ்தான் உள்ளிட்ட பத்து நாடுகளை சார்ந்த வெளிநாட்டவர்கள், பக்தி பரவசத்துடன் நடனமாடி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில், தாருகாவனத்து சித்தர் பீடம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் அழித்து ஆடையாக உடுத்துக் கொண்டதாக வழுவூர் தலபுராணம் தெரிவிக்கின்றது. புகழ் பெற்ற இந்த ஊரில் 54அடி உயரம் 54அடி நீளம் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் தாருகா வனத்து சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிராணப்பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. சித்தர் பீடத்தில் நிர்வாகி தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜைகள், வசுத்ததார, நவகிரக ஹோமங்கள் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கின. யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக 62 அடி உயர லிங்க உச்சிக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் ஒதி புனித நீர் ஊற்றி பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கருவறை தாருகாவனேஸ்வரர் சிவலிங்கத்திற்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ரஷ்யாவில் இருந்து வருகை தந்துள்ள யூலியா என்ற பெண்மணி ஒருங்கிணைப்பில், கஜகஸ்தான் லித்திவியா, ஜெர்மன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 40 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கைலாய வாத்தியம் இசைக்கப்பட்ட பொழுது வெளிநாட்டவர்கள் பக்தி பெருக்குடன் நடனமாடி வழிபாடு செய்தனர்.