நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்த
பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது
ரோட்டில் கிடந்து எடுத்ததாக வாக்குமூலம் நாகர்கோவில் மே 6:
நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் இருந்த பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரோட்டில் கிடந்து எடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளி த்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தை எஸ்பி ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களை மையமாக வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி கிராமத்திற்கு ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்துதல், பொதுமக்களுடன் நல்லறவு பேணுதல், சமூகவிரோத செயல்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை பெற்று எஸ்பி-யின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை இந்த காவலர் மேற்கொண்டு வருகிறார்.
கிராமப்புறங்கள் மட்டுமின்றி தற்போது நகர்ப்புற பகுதிகளிலும் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட போலீசை தொடர்பு கொள்ளும் வகையில் அவருடைய செல்போன் எண், மற்றும் எஸ்பியின் செல்போன் எண் போன்றவை அந்தந்த பகுதிகளில் பிளக்ஸ் பேனர்களாகவும் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பல்வேறு தகவல்கள் தற்போது காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளன. அதன்படி வடசேரி பகுதி ஊர் காவல் கண்காணிப்பு திட்ட போலீஸ்காரருக்கு நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் தரப்பிலிருந்து ஒரு தகவல் வந்தது. அதில் வடசேரி காசி விசுவநாதர் கோயில் பின்புற பகுதியில் அரிவாள் கத்தியுடன் வாலிபர்கள் அமர்ந்து இருப்பதாக தகவல் வந்தது. இது குறித்து ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ . லட்சுமணன் தலைமையில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரித்தனர். போலீசாரை பார்த்ததும் இரண்டு பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் அறிவால், கத்தி இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் மேல புத்தேரி பகுதியை சேர்ந்த அஸ்வின் (20) வடசேரி வாத்தியார் விளையை சேர்ந்த யோகா வேல். (20) என்பது தெரியவந்தது. இருவருமே பாலிடெக்னிக் மாணவர்கள் அவர். இவர்களிடம் விசாரித்த போது, ரோட்டில் கிடந்த அரிவாள் கத்தியை எடுத்து இரும்பு கடையில் விற்பதற்காக வைத்திருந்ததாக கூறினர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழா நிகழ்ச்சியை காண வந்ததாகவும் தெரிவித்தனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களின் செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்படுகிறது. அறிவால் கத்தியுடன் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.