நாகர்கோவில் செப் 12
குமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 363 இலவச வாகனம் வழங்குவதற்காக நேர்முக தகுதி பரிசீலனை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை இன்று கடைசி நாள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள மருத்துவர், மற்றும் அதிகாரிகளை சந்தித்து வாகனங்கள் பெறுவதற்கான தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர். எனவே நான்கு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானோர் தங்களுக்கு உதவியாக தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்து வந்திருந்தனர். ஒரு சிலர் தனிமையில் வந்து ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு திரும்பி பேருந்தில் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் உள்ள கேட் வழியாக வெளியே செல்ல சிரமப்பட்டு நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்த நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
நேசமணி நகர் பெண் தலைமை காவலர் விஜிகலா தனது வேலைப்பளுவின் மத்தியிலும் உடனடியாக ஓடோடி சென்று அந்த மாற்றுத்திறனாளியின் கரங்களை பிடித்து பத்திரமாக அவரை அழைத்து வந்து சாலையை கடக்க உதவி செய்து பேருந்து நிலையம் அனுப்பி வைத்தார். பெண் தலைமை காவலரின் இத்தகைய மனிதநேயமிக்க செயலை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வந்தவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்தனர். மேலும் தனது காவல் பணி மத்தியில் இதுபோல் மனிதநேயத்துடன் செயல்படும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.