தஞ்சாவூர், செப் 10:
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. மாவட்ட ஆட்சியர் ரேவதி போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், கூடைப்பந்து, நீச்சல் உள்ளிட்ட போட்டிகளும், மாணவர்களுக்கான சிலம்பம், கைப்பந்து, ஆக்கி உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன. இறகுப்பந்து போட்டி கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி பிரிவு போட்டிகளில் 3,600 மாணவர்கள், 2,620 மாணவிகள் என மொத்தம் 5,680 பேர் பங்கேற்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. பரிசுத் தொகை வெற்றியாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் செப்டம்பர் 12-ம் தேதியும் நடைபெற உள்ளன.
தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன், உதவி ஆட்சியர் சுபாஷ் கார்த்திக், திட்ட இயக்குநர் சித்ரா, முதன்மைக் கல்வி அலுவலர் பேபி, மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில், தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



