மார்த்தாண்டம், ஜூலை 2 –
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் மகன் ஷாஜி (39). இவர் ராணுவ வீரராக உள்ளார். இந்த நிலையில் ஷாஜியின் தந்தை தாமசுக்கு வாகன விபத்து இழப்பீடாக அரசு தரப்பில் இருந்து ரூபாய் 8 லட்சம் ஷாஜியின் தாய் மரிய சாந்தா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதை அறிந்த அந்தப் பகுதியில் நகை கடை வைத்துள்ள சுதர்சிங் (42) என்பவர் பணத்தை மோசடி செய்ய திட்டமிட்டார். சுதர்சிங் ஷாஜியின் குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவர் ஆவார். பின்னர் மரிய சாந்தாவிடம் உங்களது கணவருக்கு விபத்து இழப்பீடாக வந்துள்ள பணத்தை வங்கி கணக்கில் வைத்திருந்தால் அதனை பிரதமர் மோடி எடுத்து விடுவார் என்று கூறியதாக தெரிகிறது.
இதனை கேட்ட மரிய சாந்தா தனக்கு இழப்பீடாக வந்த பணம் பறிபோய் விடுமோ? என்ற பயததில் ரூ. 6 லட்சத்தை சுதர் சிங்கிடம் கொடுத்துள்ளார். பின்னர் தான் கேட்கும்போது பணத்தை திருப்பி தரவேண்டும் கூறியுள்ளார். மேலும் உள்ள 2 லட்சத்தை மற்றொரு நகை கடை உரிமையாளரான சுஜன் (35) என்பவருக்கு கொடுக்கும்படி சுதர்சிங் கூறியுள்ளார். மரிய சார்ந்தவும் ரூ. 2 லட்சத்தை அவர் கூறியபடியே கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்ததை தனது மகன் ஷாஜி இடம் மூதாட்டி சொல்லி வைத்திருந்தார். இதை அடுத்து சில நாட்களுக்குப் பின்னர் மரிய சாந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக சுதர் சிங்கிடம் தனது தாய் கொடுத்த பணத்தை ஷாஜி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்துள்ளார். தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த ஷாஜி இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் பெண்ணிடம் பிரதமர் மோடியின் பெயரை கூறி, அச்சுறுத்தி ரூ. 8 லட்சத்தை மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர்கள் சுதர்சிங் மற்றும் சுஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


