மதுரை. ஆக.29.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எம். கோபிசன், மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் மதார் பதூருதின், மாநகராட்சி துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



