நாகர்கோவில், ஜூலை 18 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 4 வழி சாலை பணிகள் பல்வேறு காரணங்களால் மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்த பணியால் நூற்றுக்கணக்கான குளங்கள், கால்வாய்கள் அழியக்கூடிய சூழல் இருந்ததால், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை நீர்நிலைகளின் குறுக்கே பாலங்கள் மற்றும் கல்வெர்ட்டுகள் அமைத்துத் தான் சாலை அமைக்க வேண்டும் எனவும் மண் கொட்டி நீர்நிலைகளை மூடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், குமரி மாவட்டத்தை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த உத்தரவுக்கு மாறாக பல்வேறு சானல்களை முழுமையாக மண் கொட்டி மூடினர். தாறுமாறாக பணிகள் நடைபெற்று வந்தன. எனவே நீர்நிலைகள் பாதிக்காமல் சாலை பணிகளை மேற்கொள்ளுமாறு பாசனத்துறை நிர்வாகிகள், குமரி விவசாயிகள் தேசிய அளவில் பிரச்சனையை எடுத்துச் சென்றனர்.
மேலும் குமரி பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைைமையிலான குழுவினர் குமரி மாவட்ட நீர்நிலைகளை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து 4 வழிசாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிக்கப்படுவதை விஞ்ஞானபூர்வமாக ஆவணப்படுத்தி, புகைப்படங்களுடன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன் பலமுறை விசாரணைக்கு வந்தது. இறுதியாக மத்திய அரசு சார்பில் ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன பாலப்பணிகள் – ஒவ்வொரு நீர்நிலையிலும் முடியமுடிய … பாசனத்துறை நிர்வாகிகள் சுட்டிக் காட்டியுள்ளவை உட்பட்ட நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளும் உடனே நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி தாக்கல் செய்தார்.
மேலும் இந்த வருட இறுதிக்குள் – நாற்கர சாலை திட்டப்பணிகள் முடியும் போது… ஒவ்வொரு நீர்நிலையாக- நீர்நிலைகளின் புனரமைப்பு பணிகளும் சாலை பணியுடன் சேர்த்து ஒருசேர நிறைவேற்றப்படுவதுடன்… நீர்நிலைகள் பழைய நிலைமைக்கு கொண்டுவரப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.
இதனை, பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பலமுறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக தந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்ற வழக்குரை ஏற்றுக் கொள்ளப்பட்டு – அதன் படியே தீர்ப்பளிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர். இதன்மூலம் குமரி மாவட்ட நீர்நிலைகள், நாற்கர சாலை திட்டத்திலிருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை குமரி மாவட்ட விவசாயிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.



