சுசீந்திரம், ஜூலை 28 –
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன் (35), செப்டிக் டேங்க் கிளீனர். இவரது மனைவி பார்வதி (28). இவர்களுக்கு பாக்கியம் (12) என்ற மகளும், நந்து (10), ராகுல் (9) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது மதுரை வீரன் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை அடுத்த மறுகால் தலை பகுதியில் உடலில் வெட்டு காயங்களுடன் மதுரை வீரன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்மநபர்கள் சராமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி சூப்பிரண்டு ஸ்டாலின், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மதுரை வீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக மதுரை வீரனின் அக்கா கணவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகள் மற்றும் கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பரண்டு பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை அடுத்த மறுகால்தலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் தம்பி செல்லையா என்பவரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் அவரது குடும்பத்தினர் மதுரைவீரனை கொலை செய்தது தெரியவந்தது. அவரை சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை அடுத்த மறுகால்தலைப்பகுதியை சேர்ந்த மாரியப்பன் (32), அவரது தாய் நாச்சியார் (53), மாரியப்பனின் மனைவிகள் முத்துலெட்சுமி (25) மற்றும் சரண்யா (25), மாரியப்பனின் தங்கை ஐஸ்வர்யா (19) ஆகிய 5 பேரும் சேர்ந்து வெட்டி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
மதுரைவீரன் குடும்பத்தாருக்கும் மாரியப்பன் குடும்பத்தாருக்கும் செப்டி டேங்க் வண்டி ஓட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டு மாரியப்பனின் தம்பி செல்லையாவை 2021ம் ஆண்டு குளச்சல் போலீஸ் நிலையை எல்கைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து மதுரை வீரன் கும்பல் கொலை செய்தது. அந்த வழக்கு தற்போது தக்கலை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினமும் மதுரை வீரன் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது மாரியப்பன் மதுரைவீரனை சமரசம் பேச அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பேரில் மதுரை வீரன் சென்று இருக்கிறார். அப்போது மாரியப்பனின் குடும்பத்தினர் மதுரை வீரன் உடன் தகராறு செய்தது மட்டுமின்றி அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக மதுரை வீரனை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த மதுரை வீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். கோர்ட்டுக்கு சென்று வந்த மதுரை வீரனை மாரியப்பன் உள்ளிட்டோர் திட்டமிட்டு வரவழைத்து சராமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாரியப்பன், அவரது தாய் நாச்சியார், மாரியப்பனின் மனைவிகள் முத்துலெட்சுமி, சரண்யா, மாரியப்பனின் தங்கை ஐஸ்வர்யா ஆகிய 5 பேர் மீதும் சுசீந்திரம் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். மேலும் அவர்கள் 5 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் இறங்கினர். அப்போது அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மதுரை வீரனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். பழிக்குபழியாக தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தால் சுசீந்திரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட மதுரைவீரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருக்கின்றது. இதனால் அவரது பெயர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் கொலையில் தலைமறைவாக உள்ள மாரியப்பன் மீதும் பல வழக்குகள் உள்ளது. அவரது பெயர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை வீரன் கொலையில் மொத்தம் 5 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களில் மாரியப்பனை தவிர 4 பேரும் பெண்கள் ஆவர். கொடூரமான முறையில் நடந்திருக்கும் ஒரு கொலை சம்பவத்தில் 4 பெண்கள் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது.


