நாகர்கோவில், ஜூலை 25 –
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டங்களை திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின் (நாகர்கோவில்), முனைவர் தாரகை கத்பர்ட் (குளச்சல்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் கட்டிடங்களை திறந்து வைத்து தெரிவிக்கையில்: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.17.30 இலட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைப் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து பெருவிளை பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் அறிவுத் தேடலைப் பூர்த்தி செய்யும் வகையில் 6வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.14.70 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஊர்புற நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள தளவாய் நகர் பகுதியில், அப்பகுதி மக்களின் வசதிக்காகப் ரூ.14.50 இலட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள படிப்பகம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் வடிவீஸ்வரம் பகுதியில், பொதுமக்களுக்குத் தரமான மருத்துவ வசதி தடையின்றிப் கிடைக்கும் பொருட்டுப் 6வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் சுற்றியுள்ள பகுதியிலிருந்து வரும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்க முடியும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) எம்.மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுராம், துறை அலுவலர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



