புதுக்கடை, ஜூலை 6 –
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் சந்திப்பு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு நபர் பைக் ஒன்றில் ஒரு பையில் மது பாட்டில்களுடன் விற்பனை செய்து கொண்டிருப்பதை கண்டுபிடித்து, அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் தப்பி செல்ல முயன்றார்.
போலீசார் மடக்கி பிடித்து, கையில் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 26 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தேங்காப்பட்டணம் அருகே உள்ள சரல்விளை பகுதியை சேர்ந்த ரசல்ராஜ் (61) என்ற கூலி தொழிலாளி என்பது தெரிய வந்தது. அரசு அனுமதியின்றி மதுவை விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரிய வந்தது. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.3640 ஆகும்.


