நாகர்கோவில், ஜூலை 6 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். செண்பகராமன் புதூர் பகுதியில் சோதனை மேற்கொண்ட பொழுது காரில் வந்த மர்ம நபர்கள் காரை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
காரை கைப்பற்றிய காவல்துறையினர் சோதனை செய்த பொழுது அதில் 37 சாக்கு மூடைகளில் 536 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்த புகையிலை பொருட்கள் மதிப்பு ரூ 1 லட்சத்து 15 ஆயிரம் என தெரிகிறது. காரை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.



