நாகர்கோவில், ஜூன் 22 –
தமிழக வெற்றி கழக தலைவரான முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. த.வெ.க. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
அந்த வகையில் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தவெக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் காமராஜ் கண்ணன் தலைமையில் ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் 12 முதியோர்க்கு ஹாண்ட் ஸ்டிக்குகள், பாம்பெர்ஸ், யூரின் சீட்கள், புத்தாடைகள், பிஸ்கட்கள், தேங்காய் எண்ணெய், சோப்புகள் மற்றும் பேஸ்ட்கள் போன்ற அன்றாடம் பயன்படும் மருத்துவ பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார். உடன் மாவட்ட இணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



