குளச்சல், ஜூன் 20 –
குளச்சல் அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (51). மீனவர். இவரது மனைவி ஜாஸ்மின் லலிதா (46). இவர்களுக்கு 24 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையில் ராஜன் தனது மனைவி ஜாஸ்மின் லலிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தனது கணவரிடம் கோபித்து கொண்டு குளச்சல் கொட்டில் பாடு பகுதியில் உள்ள தனது சகோதரி மேரி கலா (53) என்பவரின் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ராஜன் கொட்டில்பாடு சென்று தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். ஆனால் கணவகுடன் செல்ல ஜாஸ்மின் மறுத்து விட்டார். அப்போது மேரி கலாவுக்கும் ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மேரி கலாவின் கணவர் புஷ்பநாதன் இருவரையும் சமாதானம் செய்து ராஜனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார். இதனால் புஷ்பநாதன் மீது ராஜன் ஆத்திரமடைந்தார். தனது மனைவி தன்னுடன் வர மறுப்பதற்கு புஷ்பநாதனும் அவரது மனைவியும் தான் காரணம் என எண்ணினார்.
இந்த நிலையில் நேற்று ஜாஸ்மின் லலிதா வெளியூரில் நர்சிங் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக நாகர்கோவில் பஸ் நிலையம் சென்று இருந்தார். அவருடன் மேரி கலாவும் சென்றிருந்தார். புஷ்பநாதன் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் ராஜன் அங்கு சென்று தனது மனைவி எங்கே என புஷ்பநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் மகளை அழைத்து வருவதற்காக சென்று உள்ளார் என தெரிவித்தார். இதில் மாறி மாறி இருவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஆத்திரமடைந்த ராஜன் எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் எனக் கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பநாதனை இடது பக்க கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் புஷ்பநாதன் சரிந்தார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ராஜன் தப்பி ஓட்டம் பிடித்தார். படுங்காயம் அடைந்த புஷ்பநாதனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் புஷ்பநாதன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி புஷ்பநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மேரி கலா அளித்த புகாரின் பேரில் ராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். இன்று காலை ராஜன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.



