நாகர்கோவில், ஜூன் 18 –
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணா என்பவர் சிவகங்கை மாவட்ட கலெக்டராக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா என்பவர் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமித்து தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அவர் இன்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஐஸ்வர்யா கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயின் மகளாவார். சிவில் இன்ஜினியரிங் படித்துள்ள இவர் தனது 22 வயதிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 628 வது இடம் பிடித்து, ரயில்வே கணக்கு சேவையில் சேர்ந்தார். அதன் பின்னர் தளராத முயற்சியால் மீண்டும் 2019 தேர்வு எழுதி 44-வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமியால் இவருடைய வீடு முழுமையாக அழிந்த நிலையில் அத்தகைய கடினமான சூழலில் இருந்து மீண்டு வந்து இவர் இந்த உச்சத்தை தொட்டுள்ளார். இவரது சகோதரி சுஷ்மிதா ஆந்திர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேசிய ஆணையர் ஐஸ்வர்யா, நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும் சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்துவதிலும் முன்னுரிமை அளிக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



