தஞ்சாவூர், ஜூன் 15 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,056 வழக்குகளில் ரூபாய் 13.03 கோடி அளவிற்கு தீர்வு காணப்பட்டு வழக்காடுகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு மற்றும் மாவட்டத்தில் உள்ள கீழமை கோர்ட்டுகளின் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காண்பதற்காக தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொறுப்பு) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவருமான தமிழரசி தலைமை தாங்கினார்.
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி அமிர்த வேலு, குற்றவியல் நீதித்துறை நடுவர் வனிதா, வழக்கறிஞர் திராவிட செல்வன் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
முதன்மை சார்பு நீதிபதி குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜேஸ் கண்ணன், வழக்கறிஞர் மகாலட்சுமி ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 5398 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,056 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூபாய் 13 கோடியே 3 இலட்சத்து 96 ஆயிரத்து 657 அளவுக்கு தீர்வு தொகை வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது. இதில் சென்னையில் தனியார் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளராக பணி புரிந்த விபத்தில் உயிரிழந்த தினேஷ் குமாரின் குடும்பத்திற்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட 14 மாதங்களுக்குள் இழப்பீடு தொகையாக ரூபாய் 3 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த இழப்பீட்டுக்கான உத்தரவைப் பெற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விரைவாக நீதி வழங்கிய நீதிபதிகளுக்கும், தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்தும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான பாரதி, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்க தலைவர் ஜீவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



