தருமபுரி, ஜூன் 9 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் ஒழித்தல் மற்றும் போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு, சட்டவிரோத மதுபான விற்பனை தடுப்பு, போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் அரசு மதுபானங்களை சட்ட விரோதமாக சந்து கடைகள் மூலம் விற்பனை செய்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் கல்வி நிலையங்களை ஒட்டி உள்ள மளிகை கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில்லை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கட்டாயம் வைக்க வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், உதவி ஆணையர் கோபு, மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



