சேலம், ஜூன் 5 –
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் முன்னிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சேலம் ஆவின் நிர்வாகம் சார்பில் சேலம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனப் பரப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பூமியின் சுற்றுச்சூழல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இயற்கையில் இருந்து உத்வேகம் பெறும் நோக்கில் சுற்றுச்சூழல் நமது எதிர்காலத்திற்காக என்ற கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாடப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி இன்றைய தினம் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு மூலமாக சேலம் ஆவின் வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினர் உணர வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.
நெகிழி பயன்பாட்டினை தவிர்த்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு எவர்சில்வர் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. குறிப்பாக பள்ளி கல்வித்துறையின் சார்பில் நேற்றைய தினம் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விதை பந்துகள் தயாரிக்கப்பட்டது. வரும் நாட்களில் விதை பந்துகள் உரிய இடங்களில் விதைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூமி உயிரினங்களுக்கு தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பாகும். பூமியில் உள்ள வளங்களை அனைத்து தரப்பினரும் முறையாக பயன்படுத்திட வேண்டும். நமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பசுமையான ஆரோக்கியமான பூமியை விட்டு செல்ல பொது மக்களாகிய நாம் அனைவரும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.



