மார்த்தாண்டம், ஜூலை 2 –
மார்த்தாண்டம் அருகே உள்ள தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் மனைவி சரஸ்வதி (56). இவர் தனது மூன்று வயது பேத்தியுடன் களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு அரசு பஸ்ஸில் வந்தார். மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் பேருந்தை விட்டு இறங்கிய சரஸ்வதி அங்கிருந்து தக்கலை குமாரகோவில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்ற பெண் ஒருவர் சரஸ்வதியின் பேத்தியை கையில் வாங்கி வைத்திருந்தார். அதன் பிறகு சரஸ்வதி பேத்தியை வாங்கிக்கொண்டு குமாரகோவில் செல்லும் மினி பஸ்சில் ஏறினார். அப்போது பேத்தியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மார்த்தாண்டம் போலீசில் சரஸ்வதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தாலும் குற்றவாளிகள் குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக குமரி மாவட்டத்தில் டிப்டாப் உடையில் வரும் பெண்கள் பஸ்களில் பயணிகளிடம் கைவரிசை காட்டி நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் பஸ்ஸில் சென்ற 2 பெண்களிடம் 8 பவுன் தங்க நகைகள் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தகுந்ததாகும்.


